சட்டவிரோத குவாரிக்கு ரூ.29 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்
சட்டவிரோத குவாரிக்கு ரூ.29 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : மே 06, 2025 06:55 AM

மதுரை : தென்காசி மாவட்டம் சிவகிரியில் சட்டவிரோத குவாரிக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில்,'ரூ.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்து, சட்டவிரோத குவாரி நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்படும்,' என அரசு தரப்பு தெரிவித்ததை பதிவு செய்து வழக்கை பைசல் செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் தாக்கல் செய்த மனு:
சிவகிரி பகுதியில் அரசு நிலம் மட்டுமன்றி, சின்னா மற்றும் பெரிய ஆயுதபேரி நீர்நிலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாய நிலம், ரயத்வாரி நிலத்தில்சட்டவிரோதமாக கனிமம்(செங்கல் சூளைக்கு மண்) வெட்டி எடுக்கப்படுகிறது.
இதனால் அருகிலுள்ள திருநெல்வேலிவனவிலங்கு சரணாலயத்தின்சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். தடுக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என கனிமவளத்துறை கமிஷனர், தென்காசி கலெக்டர், கனிமவள உதவி இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: சட்டவிரோதமாக கனிமம் வெட்டி எடுக்கப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். அதை நிறைவேற்றவில்லை.
அரசு தரப்பு: ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.29 லட்சத்து ஆயிரத்து 484 அபராதம் விதித்தார். அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக குவாரி எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: சட்டவிரோத குவாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அப்பகுதியை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்வர். சட்டவிரோத குவாரி நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்ற அரசு தரப்பின் உத்தரவாதத்தை பதிவு செய்து வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.