ADDED : ஏப் 22, 2025 11:42 PM
''ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வழிவகை செய்யப்படும்,'' என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பால் மனோஜ் பாண்டியன்: தென்காசி மாவட்டம், கடையம் தோரணமலை முருகன் கோவிலுக்கு, கிரிவலப்பாதை அமைத்து தர வேண்டும்.
தமிழகத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு, ஜெயலலிதா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். தற்போது, 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: தோரணமலை முருகன் கோவில் கிரிவலப்பாதை, 3 கி.மீ., நீளம், 10 அடி அகலம் உடையது. அதை சீரமைக்க, 2 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிலில் போதிய நிதிவசதி இல்லை. உபயதாரரை எதிர்நோக்கி உள்ளோம்.
அதுவும் இயலாதபட்சத்தில் துறை ஆணையரின் பொது நிதியில், கிரிவலப்பாதை அமைக்கப்படும். ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வழிவகை செய்யப்படும்.
அ.தி.மு.க., - சேகர்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார், வாழவந்தி ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவிலில், தேர் வரும் வீதி பழுதடைந்துள்ளது. தேர் திருவிழா காலதாமதம் ஆகிறது. சாலையை மேம்படுத்தி, நடப்பாண்டு தேர் திருவிழாவை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகர்பாபு: இந்த ஆடி மாதம் அசைந்து வருகிற தேரால், மாரியம்மன் குதுாகலம் அடைவார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

