ஊதிய உயர்வு வழங்க ரூ.30 கோடி தேவை: அரசுக்கு போக்குவரத்து துறை கடிதம்
ஊதிய உயர்வு வழங்க ரூ.30 கோடி தேவை: அரசுக்கு போக்குவரத்து துறை கடிதம்
ADDED : ஜூன் 18, 2025 10:55 PM
சென்னை:ஊதிய ஒப்பந்தத்தை அடுத்த மாதத்தில் அமல்படுத்த, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. அதற்கு கூடுதலாக மாதந்தோறும், 30 கோடி ரூபாய் தேவை என, அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அரசு பஸ் ஊழியர் ஊதிய உயர்வுக்கான 15வது ஊதிய ஒப்பந்தம், கடந்த மே 29ம் தேதி கையெழுத்தானது. மொத்தம் 1.09 லட்சம் ஊழியர்களுக்கு, 6 சதவீத உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 1,420 ரூபாய் முதல், 6,460 ரூபாய் வரை, ஊழியர் சம்பளம் உயரும்.
இந்த புதிய சம்பளம், அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேவைப்படும் கூடுதல் தொகை குறித்து, அரசிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழகங்களின் மொத்த செலவில், ஊழியர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தின் பங்கு 53 சதவீதமாக இருக்கிறது. அரசு போக்குவரத்து கழகங்கள் தினமும், 18.63 கோடி ரூபாய் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன.
இதற்கிடையே, 15வது புதிய ஊதிய ஒப்பந்தத்தால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, மாதம் 45 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படுகிறது.
பி.எப்., உள்ளிட்ட பிடித்தம் போக, 30 கோடி ரூபாய் உடனடி தேவை. எனவே, தமிழக அரசிடம் நிதியுதவி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்ததும், அடுத்த மாதம் முதல் புதிய ஊதியம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.