ரேஷன் பொருட்களை வீடுகளில் வழங்க ஊழியர்களுக்கு ரூ.300 ஊக்கத்தொகை?
ரேஷன் பொருட்களை வீடுகளில் வழங்க ஊழியர்களுக்கு ரூ.300 ஊக்கத்தொகை?
ADDED : ஆக 15, 2025 12:45 AM
சென்னை:முதியோர் வீடுகளில் ரேஷன் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, 1,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் முதியோர், மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில், ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 34,809 ரேஷன் கடைகளை சேர்ந்த, 21.70 லட்சம் பயனாளிகளின் வீடுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பொருட்களை, ரேஷன் கடை ஊழியர்கள் வழங்க உள்ளனர். இந்த பணியில் ஈடுபடுவதற்காக ஊக்கத்தொகை வழங்குமாறு, அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தினேஷ் குமார் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் ஏற்கனவே அதிக பணிச்சுமை உள்ளது. வீடுகளுக்கு பொருட்களை எடுத்து சென்று, எடையிட்டு வழங்குவது சிரமம்.
இருப்பினும், அந்த பணியை ஊழியர்கள் சிறப்பாக செய்கின்றனர். எனவே, வீடுகளுக்கு பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபடுவதற்கு, ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீடுகளுக்கு பொருட்கள் வழங்கும் திட்டத்தில், ஒரு கடை ஊழியருக்கு சராசரியாக, 60 கார்டுதாரர்கள் வருகின்றனர். ஒரு கார்டுக்கு தலா, 5 ரூபாய் என, 300 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.