ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோ விவகாரம் விசாரிக்கப்படும்: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேச்சு
ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோ விவகாரம் விசாரிக்கப்படும்: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேச்சு
ADDED : செப் 05, 2025 07:20 AM

மதுரை: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடன் அமைச்சர் தியாகராஜன் ரூ.30 ஆயிரம் கோடி குறித்து பேசிய ஆடியோ விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
மதுரை மத்திய தொகுதி டி.எம்.கோர்ட் பகுதியில் பழனிசாமி பேசியதாவது:
இத்தொகுதி அமைச்சர் தியாகராஜன், 'உதயநிதி குடும்பத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் உள்ளனர்' என பேசிய ஆடியோ வெளியானது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இதுகுறித்து விசாரிக்கப்படும்.
திறமையற்ற முதல்வரால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, வியாபாரிகள் நிம்மதியாக இருக்க வேண்டும் என் றால் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும்.
தமிழகத்தில் தற்போது ஓய்வு பெற்ற டி.ஜி.பி., கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என திட்டங்கள் போட்டு கடைசியில் 'ஓ...' போட்டு ஓய்வில் சென்று விட்டார்.
பா.ஜ.,வுடன் தி.மு.க., ஏற்கனவே இரண்டுமுறை கூட்டணி வைத்துள்ளது. ஆனால் அ.தி.மு.க., வைத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது.
சமூக நீதியை காப்போம் என தி.மு.க., சொல்கிறது. ஆனால் திண்டிவனம், சேலம் மாவட்டங்களில் பட்டியலின அதிகாரிகள் தி.மு.க.,வினரால் அவமானப்படுத்தப்பட்டனர். கூட்டணியில் உள்ள வி.சி., கொடியை மதுரையில் ஒருஇடத்தில் கூட வைக்க அனுமதிக்கவில்லை. இதை நான் சொன்னால் பழனிசாமி கூட்டணியை உடைக்க பார்க்கிறார் என திருமாவளவன் விமர்சிப்பார். திருமாவளவனே நீங்க உஷாராக இல்லை என்றால் உங்கள் கட்சியை தி.மு.க., அபகரித்துவிடும். எச்சரிக்கையாக இருங்கள்.
இவ்வாறு அவர்பேசினார்.