பசுமை திட்டங்களில் ரூ.31,000 கோடி: சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு
பசுமை திட்டங்களில் ரூ.31,000 கோடி: சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு
ADDED : ஜன 08, 2024 06:05 AM

சென்னை : ''பசுமை மின்சாரத்தை உள்ளடக்கிய பசுமை திட்டங்களில், சிங்கப்பூர் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யும்,'' என, இந்தியாவுக்கான சிங்கப்பூர் துாதர் சைமன் வாங் தெரிவித்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், நேற்று மாலை சிங்கப்பூர் நாட்டின் கருத்தரங்கம் நடந்தது. அதை துவக்கி வைத்த சைமன் வாங் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் வந்திருந்தார். அப்போது, இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழகத்தின் வளர்ச்சி
மாநாட்டில் எங்கள் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் அதிக முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் அனைத்து துறைகளிலும், வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகம் - சிங்கப்பூர் இடையே பல நுாறு ஆண்டுகளாக நட்புறவு உள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாட்டில், தமிழக அரசுடன் இணைந்து செயல்பட முதல் பங்குதாரர் நாடாக சிங்கப்பூர் இணைந்துஉள்ளது.
மாநாட்டில் பங்கேற்ற பல நிறுவனங்கள், முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இது, மகிழ்ச்சி அளிக்கிறது.
சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் மட்டும், தமிழகத்தில், 31,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்கின்றன.
இது, மிகப்பெரிய முதலீடாகும். சிங்கப்பூர் நிறுவனங்கள், பசுமை மின்சாரம், ஐ.டி., பார்க், பசுமை கட்டடம் போன்றவற்றை உள்ளடக்கிய பசுமை திட்டங்களில் அதிக முதலீடு செய்ய உள்ளன.
கடந்த ஆண்டில், சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனங்கள், 1.57 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
நிறுவனங்கள்
கருத்தரங்கில், செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் விபுல் துலி, கேப்பிடல் லேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி கவுரி சங்கர் நாக பூஷணம், புளூ பிளானட்ஸ் கியூப் ரினிவ்யூபல் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் கிளேட்டன், என்விரோன் சென்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைலேஷ் கர்க்வால் ஆகியோரும் பேசினர்.
சிங்கப்பூரை சேர்ந்த கேப்பிடல் லேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், சென்னை நகரின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவும் வர்த்தக பூங்கா, தரவு மையம், கிடங்கு போன்ற துறைகளில், 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
மேலும், எஸ்.டி.டெலிமீடியா குளோபல் டேட்டா சென்டர், கிரேயான் டேட்டா, லயன்ஸ்பாட் இந்தியா ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்கின்றன.