சதுரகிரியில் ஆடி அமாவாசை உண்டியல் வசூல் ரூ.34 லட்சம்
சதுரகிரியில் ஆடி அமாவாசை உண்டியல் வசூல் ரூ.34 லட்சம்
ADDED : ஆக 05, 2011 12:45 AM
வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் நடந்த ஆடி அமாவாசை விழாவை தொடர்ந்து, பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 34 லட்சம் ரூபாய் வசூலானது.
சதுரகிரி மலையின் முக்கியத் திருவிழாவான ஆடி அமாவாசை விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள் குவிந்தனர் . ஐந்து நாட்கள் நடந்த இவ்விழாவின் தொடர்ச்சியாக, மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், தக்கார் செந்தில்வேலவன், நிர்வாக அதிகாரி ஜவஹர் முன்னிலையில் அனைத்து கோயில் உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கையாக 34 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வசூலானது. இது கடந்த ஆண்டு வசூலான 19 லட்சத்து 9000 ரூபாயை விட 15 லட்சத்து 56 ஆயிரத்து 200 ரூபாய் கூடுதலாகும். இத்தொகை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் மலையிலிருந்து கீழே கொண்டுவரப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. கோயிலில் கடந்த ஆண்டு மொட்டை எடுத்த பக்தர்களிடம் 160 ரூபாய் வீதம் அடாவடியாக வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு கோயில் நிர்வாகத்தின் பல்வேறு கெடுபிடி நடவடிக்கையால், அடாவடி வசூல் ஓரளவு குறைந்தது. இதன் எதிரொலியாகவும், அதிக பக்தர்களின் வரவாலும், இந்த ஆண்டு உண்டியல் வசூல் இருமடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.