கடன் வாங்கியவர்களை துன்புறுத்தி ரூ.49 கோடி பறிப்பு: சீனர்கள் 2 பேர் கைது
கடன் வாங்கியவர்களை துன்புறுத்தி ரூ.49 கோடி பறிப்பு: சீனர்கள் 2 பேர் கைது
ADDED : நவ 20, 2024 12:39 AM
சென்னை:திருச்சியில் தங்கி, செயலி வாயிலாக கடன் வழங்கி, கந்து வட்டி வசூலித்த, சீனாவை சேர்ந்த சியாவோ யா மாவோ மற்றும் வு யுவான்லுான் ஆகியோரை, நவம்பர், 13ல், அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களை மூன்று நாள் காவலில் விசாரித்த பின், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் நேற்று ஆஜர்படுத்தினர். இருவரையும், 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருச்சியில் தங்கி இருந்த சீன நாட்டினர், தமிழகத்தை சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களின் பெயரில் இரண்டு நிறுவனங்களை துவக்கி உள்ளனர். அதன் சார்பில், மொபைல் போன் செயலி உருவாக்கி, உடனடியாக கடன் வழங்கி வந்துள்ளனர்.
செயலியை பதிவிறக்கம் செய்யும் போதே, கடன் வாங்குவோரின், ஆதார், பான் கார்டு, வீட்டு முகவரி, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை பெற்றுள்ளனர். அவர்களின் மொபைல் போனில் உள்ள தொடர்பு எண்கள், உறவினர் விபரங்கள், படங்களையும் வாங்கி உள்ளனர்.
கடன் கொடுக்கும் போதே, அதற்கான செயலாக்க கட்டணம் என, பிடித்தம் செய்யப்பட்ட, 20 - 30 சதவீத தொகை போக, மீதி பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளனர்.
கடன் காலம் முடிந்த உடனேயே, 5,000 ரூபாய்க்கு, 10,000 ரூபாய் வசூலித்துள்ளனர். கடனை திருப்பி செலுத்த, அதிகபட்சம் ஏழு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கி உள்ளனர்.
உரிய தேதிக்குள் கடனை செலுத்தாவிட்டால், மொபைல் போன் வழியாக மிரட்டி உள்ளனர். அவர்களின் மொபைல் போனில் இருந்து திரட்டப்பட்ட எண்களை இணைத்து, 'வாட்ஸாப்' குழு துவக்கி, கடன் வாங்கிய நபர் மோசடி பேர்வழி என, அவதுாறு பரப்பி உள்ளனர்.
கடன் வாங்கியவரின் படங்களை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
கடன் வாங்கியவர்களை துன்புறுத்தியும், மன உளைச்சல் ஏற்படுத்தியும், 49.2 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர்.
மேலும், தங்கள் நிறுவனத்தில் இயக்குனர்களாக பணி அமர்த்தப்பட்டவர்களின் பெயரில், ரூபாய் நோட்டுகளை கிரிப்டோ கரன்சிகளாக மாற்ற, 'ஆன்லைன்' தளம் ஒன்றில் கணக்கு துவங்கி உள்ளனர். அதன் வாயிலாக, 2020 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, வெளிநாட்டில் இருந்து கிரிப்டோ கரன்சியாக, 3.54 கோடி ரூபாயை, தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அந்த தொகையை கடன் கொடுத்து, 5.20 கோடி ரூபாய் வசூலித்து, கிரிப்டோ கரன்சியாக, ஹாங்காங்கிற்கு அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.