ADDED : ஆக 15, 2025 01:26 AM
சென்னை:மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவிலில், பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட, பொது நல மனுவை, 5 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ரெத்தின குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் கீழ் வரும் அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவிலில் பல்வேறு சேவைகளுக்கு எவ்வித ரசீதுகளும் வழங்கப்படாமல், பக்தர்களிடம் இருந்து, கோவில் ஊழியர்கள், பூசாரிகள் உள்ளிட்டோர் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
கோவில் பெயரில் போலி வலைதளம் அமைத்து, அதன் வாயிலாக பணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் அளித்த புகார் மனுவை பரிசீலித்து, அறநிலையத்துறை செயலர் மற்றும் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அறநிலையத் துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''காவல்துறை விசாரணையில், வழக்கு தொடுத்தவரின் சகோதரர் தான், கோவில் பெயரில் போலி வலைதளம் உருவாக்கி, பணம் வசூல் செய்தது தெரிய வந்துள்ளது,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், 5 லட்சம் ரூபாய் அபராதத்துடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.