ரூ.5,000 லஞ்சம்: போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ஏட்டு கைது
ரூ.5,000 லஞ்சம்: போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ஏட்டு கைது
ADDED : பிப் 20, 2025 08:03 AM

சென்னை: பறிமுதல் செய்த அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு எண் சான்றிதழை திரும்ப ஒப்படைக்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து எஸ்.ஐ., மற்றும் தலைமை காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில், வின்சென்ட் செல்வகுமார் என்பவர், 'கால் டாக்சி' ஓட்டி வருகிறார். ஜன., 5ம் தேதி கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் சென்றுள்ளார். அப்போது, பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இதனால், அந்த பெண்ணுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். எஸ்.ஐ., லட்சுமணபெருமாள், தலைமை காவலர் விஜயபாஸ்கர் ஆகியோர், வின்சென்ட் செல்வகுமாரிடம், அவரின் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு எண் சான்றிதழை பறிமுதல் செய்துள்ளனர்.
இதை திரும்ப ஒப்படைக்க, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து, வின்சென்ட் செல்வகுமார், சென்னை லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில், எஸ்.ஐ., லட்சுமணபெருமாள், தலைமை காவலர் விஜயபாஸ்கர் ஆகியோர் வின்சென்ட் செல்வகுமாரிடம் லஞ்சம் வாங்கியபோது, இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.