ADDED : மே 22, 2025 12:46 AM
வால்பாறை:வால்பாறையில் உள்ள, ரிசார்ட்களில் தங்கும் சுற்றுலா பயணியர், வனப்பகுதியில் 'ட்ரோன்' பறக்க விட்டால், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை சிறந்த சுற்றுலா பகுதியாக உள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு பகுதியில் இ - பாஸ் நடைமுறையில் உள்ளதால், வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
சுற்றுலா பயணியர் தங்கி செல்ல வசதியாக வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறு டேம் உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் உள்ளன. இதுதவிர எஸ்டேட் பகுதியில், 50க்கும் மேற்பட்ட ரிசார்ட்கள் உள்ளன.
ரிசார்ட்களில் தங்குவோர், இரவு நேரங்களில் வன விலங்குகளை பார்க்க வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது, 'ட்ரோன்' பறக்க விட்டு வனப்பகுதியை படம் எடுப்பது வாடிக்கையாகி விட்டது. வனப்பகுதியில், தடையை மீறி 'ட்ரோன்' பறக்க விடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் கூறியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி 'ட்ரோன்' இயக்கக் கூடாது.
ரிசார்ட்களில் தங்கும் சுற்றுலா பயணியர் வனப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபடுகின்றனரா என்பது குறித்து, கண்காணித்து வருகிறோம்.
தடையை மீறி 'ட்ரோன்' இயக்கினால் அதிகபட்சமாக, 50,000 ரூபாய் அபராதம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.