ADDED : ஜன 09, 2024 02:45 AM
திருச்சி: திருச்சி, காட்டூர் அருகே, ரோஷன் அரேபியன் ரெஸ்டாரென்ட் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் முகமது ரபீக், 45. இவருக்கு, பழக்கமான வசந்த் என்பவர் வாயிலாக, திருச்சி, புத்துார் பகுதியை சேர்ந்த முருகானந்தம், 40, கே.கே.நகர் பகுதியை சேர்ந்த முகமது நிஜாமுதீன், 38, ஆகியோர் அறிமுகமாகினர்.
இருவரும், 'குற்றாலத்தில் நட்சத்திர ஹோட்டல் கட்டினால் அதிகம் லாபம் சம்பாதிக்கலாம்' என, கூறினார். அதை உண்மை என நம்பிய முகமது ரபீக், பல தவணைகளாக, 6.10 கோடி ரூபாயை முருகானந்தம் மற்றும் நிஜாமுதீனிடம் கொடுத்தார்.
பணத்தை வாங்கிய அவர்கள், ரபீக்கை ஏமாற்றியதோடு, பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி, மிரட்டியதாக கூறப்படுகிறது. முகமது ரபீக், போலீசில் புகார் அளித்தார்.
விசாரணை நடத்திய திருச்சி மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோசலைராமன் மற்றும் போலீசார், மோசடி செய்த முருகானந்தம், முகமது நிஜாமுதீன் உட்பட, 11 பேரை தேடி வருகின்றனர்.