பழங்குடியினருக்கு வீடு கட்ட ரூ.69.27 கோடி ஒதுக்கீடு
பழங்குடியினருக்கு வீடு கட்ட ரூ.69.27 கோடி ஒதுக்கீடு
ADDED : ஏப் 28, 2025 04:58 AM

சென்னை : பண்டைய பழங்குடியினருக்கு வீடு கட்ட, பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ், 69.27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம், பண்டைய பழங்குடியினருக்காக, பி.எம்.ஜன்மான் எனப்படும், பிரதம மந்திரியின் பெருந்திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.
இதன்படி, தமிழகத்தில், 21 மாவட்டங்களில் வசிக்கும், இருளர், காட்டு நாயக்கர், கோட்டா, குரும்பா, பனியன், தோடா பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு, வீடு கட்ட, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 60 சதவீதம் மத்திய அரசின் பங்கு; 40 சதவீதம் மாநில அரசின் பங்கு.
தமிழக அரசு, சமவெளி பகுதிக்கு 5.07 லட்சம்; மலைப்பகுதிகளுக்கு, 5.73 லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும், 2 லட்சம் ரூபாய் தவிர்த்து, மீதமுள்ள நிதி பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்படுகிறது.
இத்திட்டத்தில், 11,947 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2024 - 25ம் ஆண்டுக்கு, மத்திய அரசு தன் பங்காக, 41.56 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
மாநில அரசு தன் பங்காக, 27.71 கோடி ரூபாய் சேர்த்து, 69.27 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

