குறுந்தொழில்களுக்கு ஒதுக்கியதில் ரூ.75 கோடி கைவினைக்கு மாற்றம்
குறுந்தொழில்களுக்கு ஒதுக்கியதில் ரூ.75 கோடி கைவினைக்கு மாற்றம்
ADDED : டிச 28, 2024 08:11 PM
சென்னை:குறுந்தொழில்களுக்கான கலைஞர் கடனுதவி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட, 100 கோடி ரூபாயில், 75 கோடி ரூபாய் கைவினை திட்டத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
தமிழக அரசின், 'தாய்கோ' எனப்படும், தமிழக தொழில் கூட்டுறவு வங்கி, பல்வேறு தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் கடன் வழங்குகிறது.
இந்த வங்கியில், குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை எளிதாக்க, ஒரு பயனாளிக்கு, 7 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும், கலைஞர் கடனுதவி திட்டம் சமீபத்தில் துவக்கப்பட்டது.
இதற்கு இந்த நிதியாண்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதுவரை, 20 பேருக்கு, 4 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
அதிக நிதி ஒதுக்கியும், பலர் கடன் வாங்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர். நகை செய்தல், தையல் வேலை உள்ளிட்ட, 25 வகை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்த, கலைஞர் கைவினை திட்டம் இம்மாதம், 11ல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில் ஒருவருக்கு, 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
இதற்கு அதிகபட்சம், 50,000 ரூபாய் வரை மானியமும், 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. மூன்று வாரத்தில், 7,751 பேர் கடனுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, 37 கோடி ரூபாய் மானியம் கிடைக்க உள்ளது.
இத்திட்டத்தில் அதிகம் பேர் விண்ணப்பித்து வருவதால், கலைஞர் கடனுதவி திட்டத்துக்கு ஒதுக்கிய, 100 கோடி ரூபாயில் இருந்து, 75 கோடி ரூபாய் அவசர அவசரமாக கைவினை திட்டத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.