திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் பணம் பறிமுதல்; ஹவாலா பணமா என விசாரணை
திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் பணம் பறிமுதல்; ஹவாலா பணமா என விசாரணை
ADDED : டிச 07, 2024 08:57 AM

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்திற்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஆரோக்கியதாஸ் என்பவரிடம் ரூ.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஹவாலா பரிவர்த்தனைக்காக பணம் கடத்தப்பட்டதா என, விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஹவுராவிலிருந்து சென்னை வழியாக வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (டிச.,07) அதிகாலை 2.45 மணியளவில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டின் மற்றும் குற்றவியல் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த வேதமாணிக்கம் என்பவரது மகன் ஆரோக்கியதாஸ் (49) என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் என்பதால் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரோக்கிய தாஸை அதிகாரிகள் கைது செய்து, ஹவாலா பரிவர்த்தனைக்காக பணம் கடத்தப்பட்டதா என, விசாரிக்கின்றனர்.