மணலியில் மீட்கப்பட்ட ரூ.80 கோடி அரசு நிலம்: மீண்டும் ஆக்கிரமித்து கைவசப்படுத்திய 'தனியார்'
மணலியில் மீட்கப்பட்ட ரூ.80 கோடி அரசு நிலம்: மீண்டும் ஆக்கிரமித்து கைவசப்படுத்திய 'தனியார்'
ADDED : ஆக 28, 2024 06:56 AM

மணலி: மணலி மண்டலம் 18வது வார்டு, நெடுஞ்செழியன் சாலையில், எஸ்.ஆர்.எப்., எனும் நைலான் இழை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவன வளாகத்தில் மயானம், வாய்க்கால் மற்றும் வண்டிப்பாதை என, 3.3 ஏக்கர் பரப்பில் அரசு நிலம் இருப்பதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து, ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்தனர்.
அப்போதைய மாநகராட்சி வடக்கு வட்டார துணைகமிஷனர் சிவகுருபிரபாகரன் உத்தரவின்படி, தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்த 80 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவரை, மணலி மண்டல மாநகராட்சி ஊழியர்கள், 'பொக்லைன்' உதவியுடன் கடந்தாண்டு ஜூன் 11ம் தேதி இடித்து தள்ளினர்.
மீட்கப்பட்ட இடத்தில், 30 அடி அகலத்தில் மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், சி.பி.சி.எல்., நகர், கலைஞர் நகர் போன்ற பகுதிகளில் தேங்கும் மழைநீர், வடிகால் வழியாக புழல் உபரிநீர் கால்வாயில் வெளியேற்ற முடியும்.
இந்நிலையில், தனியார் நிறுவனம், மாநகராட்சி இடித்த சுவரை மீண்டும் கட்டியெழுப்பி, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் வாயிலாக, அந்த இடத்திற்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவன வளாகத்தில் உள்ள அரசு நிலங்களை, வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்து, மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பின், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- மாநகராட்சி அதிகாரிகள்

