ரூ.800 கோடி வேளாண் திட்டங்கள் நிதித்துறை இழுத்தடிப்பதால் தாமதம்
ரூ.800 கோடி வேளாண் திட்டங்கள் நிதித்துறை இழுத்தடிப்பதால் தாமதம்
ADDED : ஆக 12, 2025 03:14 AM
சென்னை: வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த, 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி கிடைக்காததால், முன்கூட்டியே அவற்றை துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழக அரசு, 2021ம் ஆண்டு முதல் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. நடப்பாண்டு வேளாண் பட்ஜெட்டிற்கு, 42,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அறிவித்த திட்டங்களை எல்லாம், ஜனவரி மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில், வேளாண் துறையினர் உள்ளனர்.
வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை காலம் நடைமுறையில் இருக்கும். பருவநிலை மாற்றத்தால், ஜனவரி மாதமும் மழை பெய்து வருகிறது. எனவே, அதற்குள் திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், பட்ஜெட்டில் அறிவித்த பல திட்டங்களுக்கு நிதியை ஒதுக்காமல், நிதித் துறை தாமதப்படுத்தி வருகிறது.
முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள், 1,000 இடங்களில் அமைக்கும் திட்டம், 42,000 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிதாக ஏழு அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள், பருத்தி உற்பத்தி பெருக்கு திட்டம், கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் என, 800 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களை செயல்படுத்த, இன்னும் நிதி வழங்கப்படவில்லை.
இதனால், குறித்த காலத்திற்குள் பணிகளை துவங்க முடியாமல், வேளாண் துறையினர் தவித்து வருகின்றனர்.