ADDED : ஜன 07, 2024 05:01 AM

சென்னை : பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்குகிறது.
'மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, ஏனைய அனைவருக்கும், 1,000 ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதுவரை பொங்கல் பரிசு வழங்கிய போது, எத்தனை கார்டுதாரர்கள், எவ்வளவு செலவு என்ற விபரம், உணவு வழங்கல் துறையிடம் கேட்டு, அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இலவசங்களை விரும்பாதவர்கள், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மாட்டார்கள். அதன்படி தகுதி இருந்தும் சராசரியாக, 2 லட்சம் பேர் வரை வாங்கியதில்லை.
இந்த முறை, அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு, 1,000 ரூபாய் கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் விபரங்கள் எப்படி சேகரிக்கப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலத்தில், நான்கு லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், 62,000 பொருளில்லா கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களின் விபரங்கள், உணவு வழங்கல் துறையிடம் இருந்து பெறப்பட்டு விட்டன. தமிழக அரசின் நிதித்துறை, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., எனப்படும் மென்பொருள் வாயிலாக, பிற துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் விபரங்களை கண்டறிந்துள்ளது.
மத்திய நிதித்துறையிடம் இருந்து, தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோரின் விபரங்கள் பெறப்பட்டுள்ளன. உணவு வழங்கல் துறையிடம் இருந்து, மொத்த ரேஷன் கார்டுதார்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள், வரி செலுத்துவோரினின், 'ஆதார்' எண்ணை வைத்து, அவர்களின் ரேஷன் கார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த கார்டுகள், 1,000 ரூபாய் வழங்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அதன்படி, 2.24 கோடி கார்டுதாரர்களில், 2 கோடி பேருக்கு மட்டும் தலா, 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
மின் ஆளுமை முகமையானது, ஒவ்வொரு கடை வாரியாக, 1,000 ரூபாய் வழங்க வேண்டிய கார்டுதாரர் பட்டியலை, உணவு மற்றும் கூட்டுறவு துறையிடம் நேற்று மாலை வழங்கியது. அவர்களின் வீடுகளில் பரிசு தொகுப்பு வாங்க, எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, ரேஷன் ஊழியர்கள் இன்று முதல் வழங்க உள்ளனர்.
வரும், 10ம் தேதி முதல் ரேஷன் கடைகள் வாயிலாக, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.