போலீஸ் சீருடைக்கு ஆண்டுக்கு ரூ.4,500; ஏப்., 1 முதல் அமல்
போலீஸ் சீருடைக்கு ஆண்டுக்கு ரூ.4,500; ஏப்., 1 முதல் அமல்
ADDED : மார் 03, 2024 01:43 AM

சிவகங்கை: தமிழக காவல் துறையில், 'கிரேடு - 2' போலீஸ் முதல், இன்ஸ்பெக்டர் வரை சீருடைக்கு ஆண்டுக்கு, 4,500 ரூபாய் வழங்கும் திட்டம், ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழக காவல் துறையில், 3,076 இன்ஸ்பெக்டருக்கு 3,062 மற்றும் 10,676 எஸ்.ஐ.,க்களுக்கு 6,594, சிறப்பு எஸ்.ஐ., தலைமை காவலர், கிரேடு - 1, 2 போலீசார் ஒரு லட்சத்து 17,176 பேருக்கு, ஒரு லட்சத்து 6,643 பேர் என, ஒரு லட்சத்து 30,928 பேருக்கு, தற்போது ஒரு லட்சத்து 16,299 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு சீருடை மற்றும் தொப்பி, பெல்ட், ஷூ உள்ளிட்டவை கொள்முதல் செய்து, அந்தந்த மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வாயிலாக வழங்கப்பட்டு வந்தன.
வரும் காலங்களில் கிரேடு - 2 போலீஸ் முதல், இன்ஸ்பெக்டர்கள் வரை அனைவருக்கும் சீருடை வாங்கி தைத்துக்கொள்ள, ஆண்டுக்கு 4,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் 2024 ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு, 52 கோடியே 33 லட்சத்து 45,500 ரூபாய் ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

