ADDED : ஜன 20, 2026 07:04 AM

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், பகுதி நேர துாய்மைப் பணியாளர்களுக்கு, 5,876 ரூபாய் ஊதிய உயர்வுடன், மாதம், 7,376 ரூபாய் சம்பளம் வழங்குவதற்கான ஆணையை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிர மணியன் நேற்று வழங்கினார்.
சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 1,575 பேருக்கு, ஊதிய உயர்வுக்கான ஆணையை வழங்கி, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பேறுசார் குழந்தைகள் நலத்திட்டத்தில், 1,575 பகுதி நேர துாய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இத்திட்டத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்களின் கல்வித் தகுதி அடிப்படையில், 938 பேருக்கு, பல்நோக்கு மருத்துவ பணியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, மாதம், 27,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
தற்போது பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களின் கல்வித் தகுதி அடிப்படையில், ஊதிய உயர்வு வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட நல வாழ்வு சங்கம் வாயிலாக, காலியாகும் இடங்களுக்கு, பகுதி நேர துாய்மைப் பணியாளர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.
தற்போது, 1,500 ரூபாய் ஊதியம் பெறும், பகுதி நேர துாய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு 5,000 ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் வாயிலாக, 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சார்பில், 5,876 ரூபாய் வழங்கி, மொத்தம், 7,376 ரூபாய் இனி மாத சம்பளமாக வழங்கப்படும்.
இதன் வாயிலாக, அரசுக்கு ஆண்டுக்கு, 11.10 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

