ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் ஆர்.எஸ்.எஸ்., 2 மடங்கு உறுப்பினர் சேர்க்கை
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் ஆர்.எஸ்.எஸ்., 2 மடங்கு உறுப்பினர் சேர்க்கை
ADDED : மார் 17, 2024 05:52 AM

சென்னை : ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின், ஆன்லைனில் ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக அந்த அமைப்பின் இணைப் பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், அகில பாரத பிரதிநிதி சபா எனப்படும், தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் துவங்கியது.
இன்றுடன் நிறைவு பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே உட்பட நாடெங்கும் இருந்து 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., மட்டுமல்லாது, பா.ஜ., - வி.எச்.பி., - ஏ.பி.வி.பி., உள்ளிட்ட 35 சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளனர்.
லோக்சபா தேர்தல் பணிகள், தேர்தல் முடிந்த பின் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்களை நடத்துவது, வரும் ஆண்டு முழுவதற்குமான ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா செயல் திட்டங்கள், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணிகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
பொதுக்குழு கூட்டத்தையொட்டி, ஆர்.எஸ்.எஸ்., இணைப் பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா அளித்த பேட்டி:
ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக, கடந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குப் பின், உறுப்பினராக இணைந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
நிர்வாக வசதிக்காக ஆர்.எஸ்.எஸ்.,சில், 45 மாநிலங்கள் உள்ளன. மார்ச் 1ம் தேதி நிலவரப்படி தினசரி கூடுதலான ஷாகாக்களின் எண்ணிக்கை 73,117 ஆக உள்ளது. இதுதவிர 27,717 வாரக் கூடுதல்கள், 10,567 மாதக் கூடுதல்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஷாகாக்களின் எண்ணிக்கை 4,466 அதிகரித்துள்ளது.
ஷாகாக்களுக்கு வருபவர்களில் 60 சதவீதத்தினர் மாணவர்கள். மீதமுள்ளவர்களில் தொழிலாளர்கள் அதிகமாக வருகின்றனர். 89 சதவீதத்தினர் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.
ஆர்.எஸ்.எஸ்.,ஸின் மகளிர் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதி நாடெங்கும், 460 இடங்களில் நடத்திய மகளிர் மாநாடுகளில் 5 லட்சத்து 61 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 19.38 கோடி குடும்பங்களுக்கு அழைப்பிதழ் நேரடியாக கொடுக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்த ஜனவரி 22ல் நாடு முழுவதும் 5 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் நாடு முழுதும் 27.81 கோடி பேர் பங்கேற்றனர். 9.85 லட்சம் கோவில்களில் நிகழ்ச்சிகள் நடந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.

