அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறது ஆர்.எஸ்.எஸ்.,
அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறது ஆர்.எஸ்.எஸ்.,
ADDED : ஏப் 12, 2025 02:12 AM
சென்னை:அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாட, ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில், நாளை அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடக்கிறது.
நுாறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ்., கடந்த 2024 அக்டோபர் 12 விஜயதசமி முதல், அந்த விழாவை கொண்டாடி வருகிறது. அதையொட்டி பல்வேறு மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வரும் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகிறது. பட்டியலின மக்களை ஆர்.எஸ்.எஸ்.,சை நோக்கி அதிகம் ஈர்க்கும் வகையில், வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும், அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாடுமாறு, நிர்வாகிகளை அதன் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, நாளை காலை, 10:00 மணிக்கு, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைமை அலுவலகத்தில், அந்த அமைப்பின் டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி என்ற அறக்கட்டளை சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடக்கிறது.
இதில், ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர் பிரஷோபகுமார், தேசிய பட்டியலின ஆணையத்தின் தமிழக இயக்குனர் ரவிவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பட்டியலின மக்கள் நலனுக்காக பாடுபடும் அமைப்புகள், தனிநபர்களுக்கு சமுதாய நல்லிணக்க விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., வளாகத்தில், 1984ல் வாஜ்பாயால் திறந்து வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.