தேசத்தின் அன்புமிக்க, தைரியமான கட்டுமானத்திற்கு அடித்தளம் ஆர்.எஸ்.எஸ்.,
தேசத்தின் அன்புமிக்க, தைரியமான கட்டுமானத்திற்கு அடித்தளம் ஆர்.எஸ்.எஸ்.,
UPDATED : அக் 02, 2025 11:18 PM
ADDED : அக் 02, 2025 10:59 PM

ஆர்.என்.ரவி - தமிழக கவர்னர்
இந்த விஜயதசமி திருநாளில், தேசியக் கட்டமைப்பை நோக்கிய தனது பயணத்தில் நூறாண்டுகளை நிறைவு செய்கிறது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம். தனி நபர்களின் ஒழுக்க மேம்பாட்டின் வழியான தேசியக் கட்டமைப்பு இது.
காலனித்துவ ஆட்சியாளர்களும், அவர்களின் இறையியல் கூட்டாளிகளுமான அயலகக் கிறித்துவ போதகர்களும் இணைந்து, அரசியல் ரீதியாக அடிமைப்பட்டிருந்த நம் நாட்டின் அடையாளத்தையும், வரலாற்றையும், பண்பாட்டையும், திட்டமிட்டு அழித்துக் கொண்டிருந்தனர். சாமர்த்தியமாக இட்டுக்கட்டப்பட்ட கதைகளும், தகவல்களும், பள்ளிகளுக்குள்ளும், கல்லூரிகளுக்குள்ளும், ஏன், பொது மற்றும் தனி உரையாடல்களுக்குள்ளும் வலிந்து புகுத்தப்பட்டன. பிரிட்டிஷாரின் மொழியையும், நம்பிக்கையையும், நடைஉடை பாவனைகளையும் ஏற்றுக் கொள்வதுதான், தங்களுடைய வருங்காலத்திற்கு ஒளிகொடுக்கும் என்றும், ஆன்மிக மேம்பாட்டைத் தரும் என்றும், மக்கள் தொடர்ந்து நம்ப வைக்கப்பட்டனர்.
காலனித்துவ ஆட்சியின் கொடிய விளைவுகள் குறித்து, 1931, அக்டோபர் 20ம் தேதி, தன் வட்ட மேஜை மாநாட்டு உரையில், மகாத்மா காந்தி தெளிவாக விவரித்தார்; பாரத தேசத்தை, தக்கதொரு உவமையில் வர்ணித்தார். பிரிட்டிஷார், வேர்களைத் தோண்டிச் சிதைத்துவிட்டபடியால் அழிந்துபட்ட, அழகான மரம் இது! இத்தகைய இருள் சூழ்ந்த பின்னணியில், அரசியல்ரீதியான விடுதலை மட்டுமே போதாது என்பதை, டாக்டர் ஹெட்கேவார் உணர்ந்தார். அறம் சார்ந்த எதிர்காலம் நோக்கி உலகை வழிநடத்துவதற்கான வலிமையைப் பெறவேண்டுமெனில், அறிவார்ந்த நம்பிக்கையும், ஆன்மிகச் செழுமையும் அவசியம்.
என் உரசல்
ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடனான என்னுடைய முதல் உரசல், 1981-ல் நிகழ்ந்தது. கேரள மாநிலம், கள்ளிக்கோட்டையில், காவல் துணை கண்காணிப்பாளராக, அப்போது பணிபுரிந்து கொண்டிருந்தேன். அருகிலிருந்த, கன்னுார் மாவட்டத்தின் தெளிச்சேரி வட்டாரத்தில், கொடூரமான அரசியல் வன்முறையொன்று வெடித்தது. கேரள ஆளும் கட்சியாகவிருந்த மார்க்ஸிய கம்யுனிஸ்ட் உறுப்பினர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்.,-ஸின் உள்ளூர் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்.
சி.பி.எம்., கட்சியின் கோட்டையாக கன்னுார் மாவட்டம் கருதப்பட்டதால், அந்தப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்து கொண்டிருந்ததை, அக்கட்சியினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ்.,-ஸைக் கிள்ளியெறிய, எந்த எல்லை வரைக்கும் செல்லத் துணிந்ததாகவே தெரிந்தது.
ஆளுங்கட்சியின் அரசியல் கோட்பாடுகளுக்கும், துளிர்த்துக் கொண்டிருந்த சமூக அகக் கட்டுமானங்களுக்கும் இடையிலான வேறுபாடு, ஆர்.எஸ்.எஸ்.,-ஸால் புரிய வந்தது. மக்கள், மேலும் மேலும் ஆர்.எஸ்.எஸ்.,-ஸை வரவேற்றனர்; அதிக எண்ணிக்கையிலானோர் மகிழ்ந்தனர்.-
தங்கள் குழந்தைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்., செய்து கொண்டிருந்த நன்மைகளுக்காக மகிழ்ந்தனர். ஆர்.எஸ்.எஸ்.,-ஸின் தொடர்பால், தனி வாழ்க்கையில் கட்டுப்பாடும், சமூக உறவுகளில் திறமையையும் வளர்த்துக் கொண்டிருந்தனர். பெற்றோரையும், மூத்தோரையும் மதிக்கக் கற்றனர்; கல்வியிலும் சிறந்து விளங்கினர். பாரதம் என்னும் மகத்தான தேசம் பற்றிய விழிப்பையும், முழுமையான புரிதலையும் வளர்த்துக் கொண்டிருந்தனர்.
தெரிந்த குற்றவாளிகளைப் பிடிக்காமல், வேண்டுமென்றே காவல் துறை தாழ்த்துகிறது என்னும் எண்ணம், கத்திகளையும், வாள்களையும் கொண்ட எதிர்வினையைத் துாண்டியது. அதிகரித்துக் கொண்டிருந்த மரண எண்ணிக்கையும், மாநிலம் முழுவதுமான பொதுமக்கள் கூக்குரலும், வன்முறை குறித்த பரவலான கண்டனமும், உள்ளூர் காவல் தலைமையை மாற்றவேண்டிய கட்டாயத்தை, மாநில அரசுக்குத் தோற்றுவித்தன.
தனி அலுவலர்
சுழன்றடித்துக் கொண்டிருந்த வன்முறையைக் கட்டுப்படுத்தி, இயல்புநிலையை மீட்கும் பொறுப்பில், தெளிச்சேரிக்கான தனி அலுவலராகத் தேர்வு செய்யப் பெற்றேன். இதுவரைக்கும் எனக்கு முழுமையாகப் புரிபடாத காரணங்களால், தெளிச்சேரியைச் சென்றடைந்த சில நாட்களிலேயே, உள்ளூர் வெடிப்புச் சாதனங்கள் தாயரிக்கப்பட்ட மற்றும் /அல்லது சேகரிக்கப்பட்ட இடங்கள் குறித்தத் துல்லியமான தகவல்கள், பெயர் குறிக்கப்படாத உள்ளூர் ஆதாரங்களிலிருந்தே, எனக்கு வரத் தொடங்கின.
கிடைத்த தகவல்களின் விளைவாக நிகழ்ந்த தேடுதல் செயல்பாடுகள், பல்லாயிரக்கணக்கான வெடிப்புச் சாதனங்களை, அதுவும் ஆளும் சி.பி.எம்.,-மின் உள்ளூர் மூத்த தலைவர்களின் இடங்களிலிருந்தே கண்டெடுக்க வழிகோலின. சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்கிறோம் என்னும் பெருநம்பிக்கை, வெடிப்புச் சாதனங்களை மறைத்து வைப்பதற்குக்கூட எந்த நடவடிக்கையையும் அவர்கள் எடுக்காததிலிருந்தே தெரிந்தது. ஆயினும், சாதாரண வீட்டுக் கருவிகளாகப் புழக்கத்திலிருந்த கத்திகளையும் வாள்களையும் பறிமுதல் செய்தது, பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை.
ஆளுங்கட்சிக்கு தர்மசங்கடம்
ஆளுங்கட்சிப் பிரமுகர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான வெடுப்பு குண்டுகளைப் பறிமுதல் செய்தது, கொந்தளிப்பையும் தர்மசங்கடத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியது. கன்னுார் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் அப்போதைய முதலமைச்சருமான ஈ.கே.நாயனார், தெளிச்சேரிக்கு விரைந்தார்; தம்முடைய மே நாள் உரையில், என்னை ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர் என்று ஏகத்துக்கும் குற்றம் சாட்டி ஏசினார். என் நலம் விரும்பிகள், விரைவிலேயே கடுமையான சிக்கல்கள் எனக்கு வரக்கூடும் என்று எச்சரித்தனர்.
எனினும், அப்போதைய பிரதமர் இந்திரா, அரசியலமைப்பு நெறி பழுதுபட்டதைக் காரணமாக்கி, ஈ.கே.நாயனார் தலைமையிலான ஆட்சியை நீக்கி, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்கினார். விரைவிலேயே இயல்பு நிலை திரும்ப, நானும் கள்ளிக்கோட்டை திரும்பினேன்.
புரியாத புதிரான வடகிழக்கு
பத்தாண்டுகளுக்குப் பின், உள்துறை அமைச்சகத்தின் கீழ், உளவுத் துறையில், வடகிழக்கு பாரதத்தில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றேன். பாரதத்திலிருந்து தத்தம் பகுதிகளுக்கு விடுதலை வேண்டுமென்று குரலெழுப்பிய, ஆயுதங்கள் நிரம்பப்பெற்ற, அதிகரித்துக் கொண்டே போன இனப்போராளிக் குழுக்களால், அப்பகுதி முழுவதும் வன்முறை வெடித்திருந்தது. ஏறத்தாழ வடகிழக்கு நாடு முழுவதுமே ராணுவத்தின் கீழ் கொண்டுவரப் பட்டிருந்தது. அரசின் சாசனங்களைக் குறைந்தபட்சம் நடைமுறைப்படுத்துவதில்கூட சிக்கல்கள் இருந்தன.
குடும்ப உறுப்பினர்களான பிரசாரகர்கள்
அங்கு சென்ற பின், அநேகமாக எவ்விதப் பாதுகாப்புமின்றி மக்களைச் சந்தித்த பின், நடைமுறை நிலவரங்கள் என்னை அதிரச் செய்தது. தங்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் நிலைகுலையச் செய்த தொடர் வன்முறைகளால் துயரத்திற்கும் தவிப்புக்கும் உள்ளாகியிருந்தாலும் மக்கள், நட்புடனும், உபசாரமிக்கவர்களாகவும் திகழ்ந்தனர். கிராமங்களில், மக்களுடன் மக்களாய், அவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகர்கள் வாழ்வதைக் கண்டேன்.
இந்தப் பிரசாரகர்கள் பாரதத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்; எனினும், அந்தப் பகுதிகளின் வட்டார மொழிகளைக் கற்றிருந்தனர்; அவற்றின் பழக்க வழக்கங்களையும் உடைகளையும் தழுவியிருந்தனர்; உள்ளூர் நம்பிக்கைகளைப் பணிவோடு மதித்தனர். உள்ளூர் மக்களிடமிருந்து இப்பிரசாரகர்களைப் பிரிக்கமுடியாத அளவுக்கு ஒன்றியிருந்தனர்; ஒரு சில அங்கவமைப்புகளைத் தவிர, வேறெப்படியும் இவர்களை வேறுபடுத்த முடியாது; ஆனால், இத்தகைய சின்னஞ்சிறிய வேறுபாடுகளைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை.
கிராம மக்களோடு உள்ளூர் விளையாட்டுகளை இவர்கள் விளையாடினர்; சிறு குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் கற்பித்தனர்; தேவையான பொழுது, மருத்துவ உதவிகளும் புரிந்தனர். தங்களுக்குள்ளான சச்சரவுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இவர்களையே கிராமவாசிகள் நம்பினர். அரசாங்கம் புகாத இடங்களுக்கும் சென்று ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகர்கள் பணிசெய்தனர்; நிர்வாகத்தால் முரடர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் இதயங்களையும் அன்பால் வென்றனர்.
மக்களிடம் நட்போடு பழகி பணி செய்துகொண்டிருந்த இவர்களை, இந்திய ராணுவத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த இனப் போராளிக் குழுக்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; காரணம், இந்தியர்கள் தம் பகைவர்கள் என்றே, மக்களை நம்ப வைக்க அவை முயன்றன.
தங்களின் கிறித்துவ மதமாற்றச் செயல்பாடுகளுக்குத் தடையாக இருக்கின்றனர் என்பதனால், கிறித்துவ போதகர்கள் ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகர்களை உள்ளார்ந்து வெறுத்தனர். குணமளிப்பதாகக் கூறும் சிலுவைக் கூட்டங்களை நடத்தி, எளிமையான கிராமியவாசிகளிடம் அவர்கள் இருளில் வாழுகிற அந்நியர்கள் என்றும், கிறித்துவச் செய்திகளை ஏற்றுக் கொள்ளவில்லையானால் அவர்களின் ஆன்மாக்கள் நரகத்தில் துன்புறுத்தப்படும் என்றும் போதகர்கள் கூறிக்கொண்டிருந்தனர்.
நிவாரண பணிகளில்
வடகிழக்கில், இனச் சமூகங்களுக்கு இடையேயான முரண்பாட்டு வன்முறைச் சம்பவங்கள் பலவற்றைக் கண்டுள்ளேன்; இச்சம்பவங்களில், வலுகுறைந்த சமூகங்கள், வீடுவாசல் இழந்து புலம்பெயரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளன. இப்படிப்பட்ட கடுமையான சூழல்களில், முதன்மைப் பணியாளர்களாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், உறைவிடங்களும் மருந்துகளும் அளிப்பவர்களாக, நிவாரணப் பணிகளை உடனடியாகச் செய்பவர்களாக, ஆர்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள் செயல்படுவதையும் கண்டுள்ளேன்.
அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக, மியான்மர் எல்லையையொட்டிய மாவட்டங்களில், அடிப்படை மருத்துவ வசதிகள்கூட இருக்கவில்லை. பிற மாநிலங்களிலிருந்து வந்த ஆர்.எஸ்.எஸ்., தன்னார்வத் தொண்டர்கள், மருந்துகள் உள்ளிட்ட அவசியப் பொருட்களைச் சேகரித்து வழங்கியதோடு, கடைக்கோடிப் பகுதிகளிலும் ஆக்ஸிஜன் அமைப்புகளை நிறுவி, பற்பல உயிர்களைக் காத்தனர்.
புதிய திட்டம்
பேராறு ஒன்று, நீர்ப்பரப்பில் சலனமில்லாது தோற்றம் தரினும், ஆழத்தில் பாய்ந்து கொண்டே இருப்பதுபோல், ஆர்.எஸ்.எஸ்.,சும் ஓடிக் கொண்டே இருக்கும். கடந்த, 1965-ல், சமூக அகக்கட்டுமானப் பணிகளின் அங்கமாகப் புதிய பரிசோதனைத் திட்டம் ஒன்றை ஆர்.எஸ்.எஸ்., மேற்கொண்டிருந்தது. மாநிலங்களிடை வாழ்முறையில் மாணாக்கர் அனுபவம் என்று பிற்காலங்களில் இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, வடகிழக்கு பாரதத்தின் நூற்றுக்கணக்கான இளம் மாணாக்கர்கள், நாட்டின் வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பெற்று, அங்குள்ள நட்புக் குடும்பங்களில் தங்க வைக்கப்பட்டனர். வாழ்விடம், உணவு, பண்டிகை என அனைத்தையும் பகிர்ந்துகொண்டு, அனைத்திலும் பங்கேற்று, அந்தந்தக் குடும்பங்களின் உறுப்பினர்களாகவே வாழ்ந்தனர். ஒருவருக்கொருவர் உறவும் நட்பும் பூண்டனர்.
காலப் போக்கில், நம்முடைய பரந்த பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பை ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் பெற்றனர்; இம்மாணாக்கர்களின் பெற்றோர், ரயிலையோ காரையோ கூடப் பார்த்ததில்லை. ஆயின் இம்மாணாக்கர்களில் பலர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட ஆட்சிப் பணிகளிலும், ராணுவம் போன்ற உயர்பணிகளிலும் நன்னிலை பெற்று திகழ்கின்றனர்.
சாலைகளிலும் இடங்களிலும், கண்ணி வெடிகளைப் பற்றியும், பதுங்கு வெடிகளைப் பற்றியும், அச்சமும் கவனமும் இருந்தாலும், இந்த இல்லங்களில் உணர்ந்த பாதுகாப்பை வேறெங்கும் உணர்ந்ததில்லை. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடனான என்னுடைய பல்லாண்டுகால அனுபவம், என்னை மேலும் செழிக்கச் செய்து, என்னைப் பெருமிதப்படுத்தியுள்ளது.
சிக்கல்கள்
எனினும் செறிவும் நன்னோக்கும் கொண்ட பயணத்தில், 100 ஆண்டுகளை ஆர்.எஸ்.எஸ்., நிறைவு செய்திருக்கும் இத்தருணத்தில், அனைத்து ஸ்வயம் சேவகர்களுக்கும், தேசியக் கட்டுமானத்திற்கான அவர்களின் முன்னோக்குப் பயணத்திற்கான நல்வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்! நிறுவனத் தலைவரான டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவாருக்கும், அவர்தம் தகுதிமிக்க வழித்தோன்றல்களுக்கும், லட்சோப லட்சம் பிரசாரகர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஏக் பாரத், ச்ரேஷ்ட பாரத் என்னும் நோக்கில், ஒரே பாரதம், உன்னத பாரதத்தை உருவாக்கும் பணியில், தங்களின் அனைத்தையும் அர்ப்பணித்துள்ள இவர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.