ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்களுக்கு நியாயமற்ற கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: அரசு உறுதி
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்களுக்கு நியாயமற்ற கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: அரசு உறுதி
ADDED : ஜன 06, 2024 04:48 AM

சென்னை : 'ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது' என, அரசு தெரிவித்ததை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, மாநிலம் முழுதும், 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. பின், அனுமதி கோரி, ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட அமைப்புகள் அளித்த மனுக்களை, போலீசார் நிராகரித்தனர்.
இதை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்க உத்தரவிட்டது. ஆனாலும், போலீசார் அனுமதி வழங்கவில்லை.
காவல் துறைக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்குகளில், உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆகியோர் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும் வகையில், நிபந்தனைகளுடன் கூடிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற அணிவகுப்புகள், ஊர்வலங்கள் நடத்தும் போது, பேனர்கள், பதாகைகள் எடுத்து செல்வதாக இருந்தால், அதற்கு முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். ஏதேனும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், வைப்பு தொகையை திருப்பி பெற முடியாது. இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.