ஜல்லி கலவை ஆலைக்கு சீல் வைத்த விவகாரம்: புதிதாக விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு உத்தரவு
ஜல்லி கலவை ஆலைக்கு சீல் வைத்த விவகாரம்: புதிதாக விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு உத்தரவு
ADDED : செப் 05, 2025 10:59 PM

சென்னை: நீலகிரியில் ஜல்லி கலவை ஆலைக்கு 'சீல்' வைத்த விவகாரத்தில், புதிதாக விசாரணை நடத்தி முடிவெடுக்க, கூடலுார் ஆர்.டி.ஓ.,வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தாலுகாவுக்கு உட்பட்ட தேவாலா கிராமத்தில், ராயின் என்பவருக்கு சொந்தமாக, ஜல்லியுடன் தார் கலக்கும் ஆலை உள்ளது.
உரிய உரிமங்கள், ஒப்புதல் பெற்று நடத்தப்பட்டு வரும், ஆலை வளாகத்தை மூடுவது; 'சீல்' வைப்பது; இடிக்கப்படும் என, அச்சுறுத்துவது; ஆலைக்கு எதிராக போராடும்படி மக்களை துாண்டுவது போன்ற, கூடலுார் ஆர்.டி.ஓ., நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ராயின் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜல்லி கலவை ஆலை மீது நடவடிக்கை எடுக்க, இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை மீறி, கூடலுார் ஆர்.டி.ஓ., எஸ்.கே.குணசேகரனுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும், ராயின் தொடர்ந்திருந்தார். இந்த மனுக்களை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜான்சத்யன் ஆஜராகி,ஆலையை மூடி சீல் வைக்கும் உத்தரவை பிறப்பிக்கும் முன், ஆர்.டி.ஓ., எந்தவொரு அறிவிப்பையும் வழங்கவில்லை. ஆர்.டி.ஓ., மனதை செலுத்தாமல், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்றார்.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஹாஜா நசிருதீன் ஆஜராகி, மனுதாரர் விதிகளை மீறியுள்ளார். மனுதாரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே, மறுபரிசீலனை செய்யப்பட்டு, ஆலைக்கு 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. ஆலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து இன்னும் அகற்றப்படவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் அளித்ததோடு, போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மனுதாரரின் ஆலைக்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்துள்ளன, என்றார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், 'ஆலையை பூட்டி சீல் வைத்துள்ளதால், வளாகத்தில் உள்ள இடிபாடுகளை அகற்ற முடியவில்லை' என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,' ஆலைக்கு சீல் வைக்க ஆர்.டி.ஓ., பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரருக்கு வாய்ப்பை வழங்கி, புதிய விசாரணையை நடத்தி, இரண்டு வாரங்களுக்குள் புதிய உத்தரவை, கூடலுார் ஆர்.டி.ஓ., பிறப்பிக்க வேண்டும். ஆலையில் இடிந்து விழுந்த சுவற்றின் இடிபாடுகளை மட்டுமே, இரண்டு நாட்களுக்குள், மனுதாரர் அகற்ற வேண்டும். அதற்காக மட்டும் ஆலையை திறந்துவிட்டு, பின் ஆலையை ஆர்.டி.ஓ., மூடி வைக்க வேண்டும்' என உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.