ஆளுங்கட்சி மா.செ., பேச்சு; சொந்த கட்சி எம்.எல்.ஏ., கடும் அதிருப்தி
ஆளுங்கட்சி மா.செ., பேச்சு; சொந்த கட்சி எம்.எல்.ஏ., கடும் அதிருப்தி
ADDED : பிப் 08, 2026 06:50 AM

வேலுார்: ''வரும் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றால், பாதாள சாக்கடை திட்டத்தை கேளுங்கள்,'' என தி.மு.க., மாவட்ட செயலர் நந்தகுமார் பேசியதால், அக்கட்சியின் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ.,வான அமுலு விஜயன் அதிருப்தி அடைந்தார்.
வேலுார் பார்க் இன் ஹோட்டலில், மாவட்ட நிர்வாகம் சார்பில், வேலுார் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சியில் அணைக்கட்டு எம்.எல்.ஏ.,வும், வேலுார் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலருமான நந்தகுமார், குடியாத்தம் எம்.எல்.ஏ., அமுலு விஜயன், வேலுார் தொகுதி எம்.பி.,யான கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நந்தகுமார் பேசுகையில், ''வேலுார் மாநகரத்தில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்துள்ளன. இங்கு பங்கேற்றிருக்கும் குடியாத்தம் எம்.எல்.ஏ.,வான அமுலு விஜயன், தன் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.
''வரும் தேர்தலில் போட்டியிடும் ஆவல் இல்லை என்றால், பாதாள சாக்கடை திட்டத்தை கேளுங்கள். வேலுார் மாநகராட்சியில் உள்ள, என் தொகுதிக்கு உட்பட்ட அரியூர் பகுதியில், 200 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
''ஆனால், பாதாள சாக்கடை பணிகளை முடிக்க, 10 ஆண்டுகளாகும் என்கின்றனர். பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிறைய கெட்ட பெயர் வரும். அதனால், திட்டத்தை கோரி பெறாமல் இருப்பது நல்லது,'' என்றார்.
