12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் பேரணி
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் பேரணி
UPDATED : டிச 20, 2025 11:46 AM
ADDED : டிச 20, 2025 06:21 AM

சென்னை: ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை, அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று கவன ஈர்ப்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிந்தாதிரிப்பேட்டை எல்.ஜி., ரவுண்டானாவில் துவங்கி, ராஜரத்தினம் மைதானம் வரை நடந்த பேரணிக்கு, சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.பேரணியில் பங்கேற்ற ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். துாய்மை காவலர் ஆர்ப்பாட்டம் குறித்து பாலசுப்பிர மணியன் கூறியதாவது:
கிராமப்புற ஊராட்சி களில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர், துாய்மை காவலர், சுகாதாரம் ஊக்குவிப்போர் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களுக்கு, அரசு தொகுப்பூதியமாக, மாதம் 2,000 முதல் 5,000 ரூபாய் வரை வழங்குகிறது. இதை குறைந்தபட்சம், 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரி, நான்கு ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
அரசும், அதிகாரிகளும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடைநிலை ஊழியர்களின் வாழ்வாதாரம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து போராடியும், அரசு கண்டு கொள்ளாததை எதிர்த்தும், அதிகாரிகளுக்கு இதன் அவசியத்தை நினைவுறுத்தவும், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளோம்.
அதேபோல, ஊராட்சி செயலர் பதவியில், 10 ஆண்டுகளை நிறைவு செய்தோருக்கு, சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை அடிப்படையில், ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு முன்வர வேண்டும். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால், புதிதாக பணியில் சேர்ந்த ஊராட்சி செயலர்கள் பெறும் ஊதியத்தையே, பல ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஊழியர்களும் பெறுகின்றனர்.
ஆணையரிடம் மனு இம்முறையில் ஊராட்சி செயலர்களுக்கு, ஒரே நிலை ஊதியம் என்பதை மாற்றி, பணி அனுபவத்தின் அடிப்படையில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஊராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் . எங்களது, 12 அம்ச கோரிக்கைகள் குறித்து, ஊரக வளர்ச்சி துறை கூடுதல் செயலர் மற்றும் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம். அதிகாரிகளின் நடவடிக்கையை பொறுத்து, அடுத்தக்கட்ட போராட்டத்தை துவக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

