ஊரக வளர்ச்சி துறையில் பணிகள் தொய்வு: அமைச்சர் ஆனந்த் பாராமுகம்
ஊரக வளர்ச்சி துறையில் பணிகள் தொய்வு: அமைச்சர் ஆனந்த் பாராமுகம்
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 11:52 PM
சென்னை: துறை ரீதியான அலுவல் கூட்டங்களை, அமைச்சர் ஆனந்த் நடத்தாமல் இருப்பதால், அவரது துறைகளில், பல்வேறு பணிகள் முடங்கி கிடப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.
த.வெ.க., கூட்டணி அரசில், முதல்வர் விஜய்க்கு அடுத்த நிலையில், அமைச்சர் ஆனந்த் இருக்கிறார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நீர்வளத்துறை என, முக்கியமான துறைகளை ஆனந்த் கவனிக்கிறார்.
அதன்படி, தற்போது பருவமழை தொடங்க உள்ள நேரத்தில், இரு துறைகளும் முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.
ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:
பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஊரக வளர்ச்சி துறை, நீர்வளத்துறை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அமைச்சர் தலைமையில் நடக்க வேண்டிய, துறை ரீதியிலான அலுவல் கூட்டம் முறையாக நடந்தால்தான், அதிகாரிகள் முறைப்படி வேலை செய்வர். தற்போது, இடைத்தேர்தல் பரப்புரையில், அமைச்சர் இருப்பதாக காரணம் சொல்கின்றனர்.
ஆனால், ஊரக வளர்ச்சி துறையை பொறுத்தவரை, கடந்த ஜூலை 30ல் நடந்த கூட்டத்துக்கு பின், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த், துறையை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
அதேபோல், பருவமழை தொடங்கும் முன்பாக, நீர்வளத்துறை சார்பாக ஊரக பகுதிகளில் நடக்க வேண்டிய துார்வாரும் பணிகளும் மெத்தனமாக நடக்கின்றன.
இதை முதல் ஆளாக நின்று, முடுக்கி விட வேண்டிய அமைச்சர் ஆனந்த், ஆர்வமின்மையாக இருப்பதால், அதிகாரிகளும் மெத்தனமாக இருக்கின்றனர். அமைச்சரின் அனுமதி கிடைக்காததால், சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதிலும், முக்கியமான பணிகளுக்கான டெண்டர்களும் தாமதமாகின்றன.
குறிப்பாக, ‘எல் நினோ’ காரணமாக, மழை இருக்காது என, அதிகாரிகள் நினைக்கின்றனர். ஆனால், பருவ நிலையில் மாற்றம் வந்தால், தமிழகம் பெரும் பாதிப்பை அடையும். எனவே, இடைத்தேர்தல் முடிந்த பின்னராவது, துறையில் அமைச்சர் ஆனந்த் ஆர்வம் காட்ட வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
