பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊரக பணியாளர்கள் உண்ணாவிரதம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊரக பணியாளர்கள் உண்ணாவிரதம்
ADDED : நவ 12, 2024 02:39 AM

சென்னை: பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும், ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அனைத்து பணியாளர் கள் சங்கம் சார்பில் நடந்த, உண்ணாவிரதப் போராட்டத்தில், ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து, சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரி கூறியதாவது:
ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு, அடிப்படை ஊதியம் வழங்குவதுடன், நேரடியாக வங்கி கணக்கிற்கு செலுத்த வேண்டும்.
கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் திட்டத்தை தனி துறையாக, அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்க, ஆணை பிறப்பிக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு வைப்பு நிதி காப்பீடு, உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். உயர் அதிகாரிகளின் வன்மம் மற்றும் பழிவாங்கல் காரணமாக வெளியேற்றப்பட்ட பணியாளர்களை, மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.
ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம். எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டத்தை தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

