ADDED : மார் 28, 2025 05:21 AM

சென்னை: இந்திய கடற்படையுடன் இணைந்து, கூட்டு ராணுவப் பயிற்சி ஒத்திகை மேற்கொள்வதற்காக, இரண்டு ரஷ்ய போர்க் கப்பல்கள் சென்னை வந்துள்ளன.
நாட்டின் பாதுகாப்பு திறன்களை மேற்படுத்த, பல்வேறு நாடுகளுடன் இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய கடற்படை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வியட்நாம், ஜப்பான், பிரான்ஸ், மலேஷியா என, 50க்கும் மேற்பட்ட நாடுகளின் கடற்படையுடன் இணைந்து, கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுகிறது.
அந்த வரிசையில், இந்திய - ரஷ்ய கடற்படையினர் நடப்பாண்டு கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக, ரஷ்ய கடற்படையின் இரண்டு போர் கப்பல்கள் நேற்று முன்தினம் சென்னை வந்தன. இந்திய கடற்படை கப்பல்கள் நாளை சென்னை வர உள்ளன.
ரஷ்ய கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களை, இந்திய கடற்படையின் தமிழகம், புதுச்சேரி பொறுப்பு அதிகாரி சுரதன் மாகோன் முறைப்படி வரவேற்றார். அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

