தேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம்: ஜெய்சங்கர் திட்டவட்டம்
தேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம்: ஜெய்சங்கர் திட்டவட்டம்
ADDED : டிச 22, 2024 09:57 AM

மும்பை: 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதையெல்லாம் பயப்படாமல் செய்வோம்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய உயரிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியாவின் பாரம்பரியத்தில் இருந்து பெறப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. உலகமயமாக்கல் காலத்தில், தொழில்நுட்பத்திலும் முன்னேற வேண்டும். எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதையெல்லாம் பயப்படாமல் செய்வோம்.
இந்தியா ஒரு நாகரிக நாடாக இருப்பதால் ஒரு விதிவிலக்கான தேசம். உலக அரங்கில் கலாசார வலிமையை முழுமையாக பயன்படுத்தும் போதுதான் வலிமை உயரும். வறுமை, பாகுபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். இளைய தலைமுறையினருக்கு நமது பாரம்பரியத்தின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை முழுமையாக தெரியப்படுத்துவது அவசியம்.
கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. இங்கு முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக அரங்கில் இந்தியா தனது திறனையும், அர்ப்பணிப்பையும் நிரூபித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.