மதுரை, தென்காசி வழியாக சபரிமலை சிறப்பு ரயில்கள்: தென் மாவட்ட ஐயப்ப பக்தர்கள் எதிர்பார்ப்பு
மதுரை, தென்காசி வழியாக சபரிமலை சிறப்பு ரயில்கள்: தென் மாவட்ட ஐயப்ப பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 04, 2025 01:52 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:  சபரிமலை மண்டல பூஜை சீசனை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து  மதுரை, தென்காசி வழியாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன் வர வேண்டுமென தென்மாவட்ட ஐயப்ப பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சபரிமலை மண்டல பூஜை சீசனில் பெங்களூரு,  சென்னை உட்பட வடமாவட்ட நகரங்களில் இருந்து வரும் பக்தர்கள் போதிய ரயில் வசதி கிடைக்காமல் கார், வேன், பஸ்களில் மிகுந்த சிரமத்துடன்  ஆண்டுதோறும் பயணிக்கின்றனர்.
தெற்கு ரயில்வே நிர்வாகம் சென்னை, பெங்களூருவில் இருந்து சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, பாலக்காடு,  எர்ணாகுளம், கோட்டயம் வழியாக அதிகளவில் சிறப்பு ரயில்கள் இயக்குவது வழக்கம்.
தற்போதும் டிச.,16 முதல் ஜன.,18 வரை சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், வேலுார், சேலம், கோவை, பாலக்காடு, எர்ணாகுளம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், தென்காசி, ஆரியங்காவு, தென்மலை,  புனலுார் வழியாக  சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவிக்கவில்லை.
தற்போது சென்னை -- செங்கோட்டை வழித்தடத்தில் பொதிகை, கொல்லம் ரயில்கள் மட்டும்தான் தினசரி இயங்குகின்றன. இந்த ரயில்களிலும் அதிக அளவில் வெயிட்டிங் லிஸ்ட் நிலை  உள்ளது.
எனவே நவ., 16 முதல் ஜன., 18 வரை சென்னையில் மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார்,  தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை வழியாக காலை 6:00 மணிக்கு புனலுார் சென்றடையும் வகையிலும்,
மறு மார்க்கத்தில் புனலுாரில் இரவு 8:00  மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் திரும்ப பயணித்து மறுநாள் காலை 8:00 மணிக்கு  சென்னை சென்றடையும் வகையிலும், பெங்களூருவில் இருந்து சேலம், மதுரை, விருதுநகர்,  தென்காசி வழியாகவும் தினசரி சிறப்பு ரயில் இயக்குவற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என தென் மாவட்ட ஐய்யப்ப பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

