ADDED : நவ 14, 2024 12:53 AM
சென்னை : 'அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, காவல் துறையுடன் இணைந்து, தணிக்கை செய்யப்படும்' என, வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:
மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில், காவல் துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் இணைந்து, பாதுகாப்பு தணிக்கை நடத்தப்படும். மருத்துவமனை வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள, அனைத்து கண்காணிப்பு கேமராக்கள், செயல்பாட்டில் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். போதிய மின் விளக்கு வசதிகள் இருத்தல் அவசியம். மருத்துவமனை புறக்காவல் நிலையங்களில், தேவையான எண்ணிக்கையில், காவலர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும்.
அனைத்து டாக்டர்களும், சுகாதாரப் பணியாளர்களும், அவசர உதவி தேவைப்படும்போது, காவல் உதவி செயலி வாயிலாக, கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக செய்தி அனுப்பலாம். மருத்துவமனை பாதுகாப்புக் குழு, வன்முறை தடுப்புக் குழுக்களை, மருத்துவமனைகளில் அமைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிக்கையில், 'டாக்டர்கள் மீது தாக்குதல், மருத்துவமனைகளை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்' என, தெரிவித்துள்ளார்.