ADDED : டிச 18, 2024 11:01 PM

சென்னை:தமிழ் மொழிக்கான இந்த ஆண்டின், 'சாகித்ய அகாடமி' விருது, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ள, 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் -- 1908' ஆய்வு நுாலுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின், 'சாகித்ய அகாடமி' இலக்கிய அமைப்பு, நாட்டில் உள்ள, 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்குகிறது. இந்த ஆண்டு, தமிழ் மொழிக்கான விருது, வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ள, 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் - 1908' என்ற நுாலுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் உள்ளிட்ட 21 மொழிகளில் வெளியான எட்டு கவிதை, மூன்று நாவல், இரண்டு சிறுகதை, மூன்று கட்டுரை, மூன்று இலக்கிய திறனாய்வு, ஒரு நாடகம், ஒரு ஆய்வு நுால்களுக்கு, விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வங்காளம், டோக்ரி, உருது மொழிக்கான விருதுகள், பின்னர் அறிவிக்கப்படும் என, அகாடமி செயலர் ஸ்ரீனிவாசராவ் தெரிவித்து உள்ளார்.
புது டில்லி, காமணி அரங்கில், அடுத்த ஆண்டு மார்ச் 8ல் நடக்கும் விழாவில், சாகித்ய அகாடமி விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.
தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது பெற உள்ள, 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் - 1908' நுாலை, பாரதிபாலன், இமையம், மறைமலை இலக்குவனார் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு தேர்ந்தெடுத்தது.
புத்தகத்தில் என்ன?
கடந்த 1908, மார்ச் 13, வெள்ளிக் கிழமை, விடுதலை போராட்ட வீரர் வ.உ.சி., கைது செய்யப்பட்டார். இந்த செய்தியை கேட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடி மக்கள் தெருவில் இறங்கி போராடினர்; வேலை நிறுத்தம் செய்தனர்; அரசு சொத்துக்களை அழித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் அரசு, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த எழுச்சியை அடக்க, பிரிட்டிஷ் அரசு எடுத்த நடவடிக்கைகளையும், வ.உ.சி.,யின் நிலைப்பாட்டையும், தரவுகளின் வாயிலாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நுால்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில், பேராசிரியராக பணியாற்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சென்னை பல்கலை, சிகாகோ பல்கலை, சிங்கப்பூர் பல்கலை ஆகியவற்றில் பணியாற்றியவர்.
புதுமைப்பித்தன், பாரதியார், வ.உ.சி., உள்ளிட்டோரின் படைப்புகளையும், தமிழ் இலக்கியம், தமிழக வரலாறுகளையும் எழுதி உள்ளார். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இரட்டிப்பு மகிழ்ச்சி
- முதல்வர் ஸ்டாலின்