ADDED : ஜன 27, 2024 02:36 AM
சென்னை:பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் 12105 பகுதி நேர பயிற்றுனர்களின் தொகுப்பூதியத்தை 10,000 ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆண்டு அக்டோபரில் பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேச்சு நடத்தினார்.
அப்போது அறிவித்தபடி பகுதி நேர பயிற்றுனர்கள் 12105 பேரின் தொகுப்பூதியத்தை மாதம் 10000 ரூபாயில் இருந்து 12500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக நடப்பு நிதியாண்டில் 9.07 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில் ''பேச்சின் போது அமைச்சர் உறுதி அளித்தபடி 2500 ரூபாய் சம்பள உயர்வு கிடைத்துள்ளது.
10 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதற்கான ஆணை வரவில்லை. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் 12000 பேரையும் நிரந்தரம் செய்ய வேண்டும்'' என்றார்.

