ADDED : மார் 12, 2024 01:28 AM
சென்னை: சென்னையில் இருந்து சேலம் செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல, நேற்று முன்தினம் காலை, 64 பயணிகள் காத்திருந்தனர். அவர்களின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பரிசோதித்தனர்.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த, 35 வயது நபர், தெலுங்கானா மாநிலம் ைஹதராபாதை சேர்ந்த 30 வயது நபர் என, இருவரை பரிசோதித்த போது, அவர்கள் வைத்திருந்தது 'சாட்டிலைட் போன்'கள் என, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சந்தேகப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, நம் நாட்டில் சாட்டிலைட் போன் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது.
அப்போது இருவரும்,' புவியியல் ஆராய்ச்சி வசதியுடன் கூடிய கருவிகள்' என்று கூறினர். ஆனாலும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரின் பயணத்தை ரத்து செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த கருவிகளை பறிமுதல் செய்தனர். இதனால், சென்னை - சேலம் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது; பயணியர் அவதிப்பட்டனர்.
விமான நிலைய போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். அதற்கான கருவிகள் தான் என்றனர்.
தொடர் விசாரணையில் அவை கருவிகள் தான் என உறுதி செய்யப்பட்டது. இருவரும் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்போலீசார் அனுப்பிவைத்தனர்.

