ADDED : ஏப் 25, 2025 12:25 AM
சென்னை:கூட்டுறவு துறையின் கீழ் மாநிலம் முழுதும், 45 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளும், 320 தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகளும் செயல்படுகின்றன. இவை, பல்பொருள் அங்காடிகள், மருந்தகம், காய்கறி கடை, பெட்ரோல் பங்க், காஸ் ஏஜென்சி மற்றும் ரேஷன் கடைகளையும் நடத்துகின்றன.
கூட்டுறவு பண்டகசாலைகளில், 2024 - 25ல், 2,196 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இதுவே, அதற்கு முந்தைய ஆண்டில், 1,360 கோடி ரூபாயாக இருந்தது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார் அங்காடிக்கு இணையாக கூட்டுறவு அங்காடிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வெளிச்சந்தையை விட, சற்று குறைந்த விலைக்கு தரமான பொருட்கள் விற்கப்படுகின்றன.
மஞ்சள், மசாலா பொருட்கள், மாவு வகைகள், சமையல் எண்ணெய் என, பல பொருட்களை கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கின்றன. அவை, 'காமதேனு, காஞ்சி' என்ற பெயரில் விற்கப்படுகின்றன.
இதற்கு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.