ADDED : ஜன 17, 2025 11:58 PM

புதுடில்லி:இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 2.50 கோடி கார்கள் விற்பனையாவதாகவும், இது பல்வேறு நாடுகளின் மக்கள் தொகையை காட்டிலும் அதிகம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டில்லியில் 'பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025' வாகன கண்காட்சியைத் துவங்கி வைத்து பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வாகனத்துறையில் முதலீடு செய்ய விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் உகந்த இடமாக இந்தியா உள்ளது.
மேலும், முதலீட்டாளர்களுக்கு அனைத்து விதமான உதவிகளை வழங்க அரசும் தயாராக உள்ளது.
இந்தியாவில் தற்போது ஆண்டு ஒன்றுக்கு 2.50 கோடிக்கும் அதிகமான கார்கள் விற்பனையாகின்றன. இவை, பல்வேறு நாடுகளின் மக்கள் தொகையை விடவும் அதிகமாகும்.
நாட்டின் இளைஞர் திறன், வருமான வளர்ச்சி, நடுத்தர வர்க்கத்துக்கு அதிகப்படியானோர் முன்னேற்றம் ஆகியவையே இதற்கு முக்கிய காரணமாகும்.
'மேக் இன் இந்தியா, உற்பத்தி சார் ஊக்குவிப்பு' போன்ற அரசின் திட்டங்கள் இதற்கு வழிவகுத்துள்ளன. வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் மேம்பட்ட சாலை உள்கட்டமைப்பு போன்றவற்றால், இனி வரும் காலங்களில் நாட்டின் வாகனத்துறை மேலும் வளர்ச்சியடைய உள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், மலிவான விலையில் கார் தயாரிப்பதன் வாயிலாக, உலகின் வாகன தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கவுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள், உள்நாட்டு தேவைக்கு மட்டுமன்றி; பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே பெட்ரோல் அல்லது டீசலால் இயங்கக்கூடிய கார்களை வைத்திருப்பதால், அவர்கள் அதிலிருந்து மின்சார கார்களுக்கு மாற வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சம் ஒன்று உள்ளது. இங்கு முதல்முறை கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால், தரமான மின்சார கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தினால், மக்களின் வாகனம் வாங்கும் முறையும் மாறும்; மாசுபாடும் குறையும்.
பியுஷ் கோயல்,
மத்திய அமைச்சர், வர்த்தகத்துறை
மாருதி சுசூகி நிறுவனம், அதன் முதல் மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. 'இ - விடாரா' என்ற இந்த கார், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக சுசூகி நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசுகி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள நிறுவனத்தின் ஆலையில், வரும் மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் துவக்கத்தில் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கு தயாரிக்கப்பட உள்ள கார்களில் 50 சதவீதம் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.