ADDED : பிப் 05, 2025 10:47 AM

காஞ்சிபுரம்: சாம்சங் தொழிற்சாலையில் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நிரந்தரம் மற்று ஒப்பந்தம் என்ற அடிப்படையில் 3000க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று 36 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
அரசு நடத்திய பல கட்ட பேச்சுக்கு பின்னர் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர், அண்மையில் கடந்த மாதம் 27ம் தேதி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தின் 3 பேரை ஆலை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மோகன்ராஜ், சிவநேசன், குணசேகரன் ஆகிய 3 பேரும் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆவர்.
இதை அறிந்து சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆலை நிர்வாகம் விதிகளை மீறி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.