ADDED : ஜன 28, 2025 05:53 AM
ஸ்ரீபெரும்புதுார் : காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும், 'சாம்சங்' தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு செப்., 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தலைமையில், அக்., 14, 15ம் தேதிகளில் தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சில், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், சுமுக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியானது.
அதன்படி, அக்., 17ம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பிய போராட்ட தொழிலாளர்களிடம், ஒரு வார பயிற்சி அளிக்கப்படும் என, தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடந்து, அக்., 21ம் தேதி முதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், 'சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம்' அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
சென்னை தொழிலாளர் துறை துணை ஆணையர் ரமேஷ், அதற்கான ஆணையை தொழிற்சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.