UPDATED : ஆக 26, 2024 11:39 PM
ADDED : ஆக 26, 2024 11:35 PM

சென்னை : தமிழகத்தில் ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு தீர்வு காண, அரசு எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், தமிழகத்தில் இருந்து அரசியல்வாதிகள் ஆசியுடன், வெளி மாநிலங்களுக்கு தினமும், 7,500 லோடுகள் வரை கனிம வளங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் விதியை மீறி மணல் அள்ளியதால், ஆற்றில் நீரோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, ஆற்று மணலுக்கு மாற்றாக, ஜல்லி துகள்களான, 'எம் சாண்ட்' அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, 440க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி தரப்பட்டது; எம் சாண்ட் கொள்கையும் வெளியிடப்பட்டது.
புதிதாக தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆற்று மணல் குவாரிகளை திறந்து, மணல் விற்பனை செய்ய அரசு முடிவு செய்தது.
குற்றச்சாட்டு
கனிம வளத்துறை, நீர்வளத்துறை வாயிலாக, 100க்கும் மேற்பட்ட குவாரிகளை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 37 குவாரிகளுக்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.
ஆனால், 17 குவாரிகள் மட்டுமே திறக்கப்பட்டு, மணல் விற்பனை நடந்தது. மணல் அள்ளி விற்பனை செய்வதற்கான பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன.
குவாரிகளில் விதியை மீறி மணல் எடுப்பதாகவும், அதன் வாயிலாக, 4,730 கோடி ரூபாய்க்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, மணல் குவாரிகளிலும், ஒப்பந்த நிறுவன உரிமையாளர்கள், நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களிலும், அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியது.
இதில், 12.82 கோடி ரூபாய், 1,024 கிராம் தங்கம் உள்ளிட்ட, 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இந்த முறைகேடு தொடர்பாக, வேலுார், அரியலுார், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
அதிரடி
அமலாக்கத்துறை அதிரடியால், 17 குவாரிகள் மூடப்பட்டன. அதன்பின் துவக்கப்பட்ட, 10 குவாரிகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கட்டுமான பணிக்கு ஒரு நாளைக்கு, 45,000 லோடு வரை மணல் தேவை. குறைந்த அளவிலான குவாரிகள் இயங்குவதால், ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் சொர்ணமுகி, பெண்ணாறு, பாலாறு உள்ளிட்டவற்றில் இருந்து எடுக்கப்படும் மணல், திருவள்ளூர், வேலுார் மாவட்டங்கள் வழியாக, திருட்டுத்தனமாக தமிழகம் எடுத்து வரப்படுகிறது. இந்த மணல், 10 யூனிட் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வரும் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்குகிறது. அதற்குள், கான்கிரீட் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டால், கட்டுமான பணிகளை தொடர்ந்து, தொய்வின்றி செய்ய முடியும்.
மணல் கிடைக்காததால், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு கட்டடங்கள் மட்டுமின்றி, வீடுகள் கட்டும் பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
கட்டுமான நிறுவனங்கள், 'எம் சாண்ட்' பயன்படுத்த துவங்கியுள்ளன. மேற்கூரை, சுவர்கள் உள்ளிட்ட பூச்சு வேலைகளுக்கும், வீடுகளுக்கான கான்கிரீட் பணிகளுக்கும் ஆற்றுமணலை பயன்படுத்த பலரும் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் ஆற்று மணல் கிடைப்பது அரிதாகி உள்ளது. அப்படியே மணல் கிடைத்தாலும், ஒரு கன அடி, 120 ரூபாய் என, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால், குறித்த காலத்தில் கட்டுமான பணிகளை முடிக்க முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
கடத்தல் தாராளம்
தமிழக மணல், எம் சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல கூட்டமைப்பு தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் அறிக்கை:
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நல்ல முறையில் மழை பெய்துள்ள நிலையில், ஆறுகளில் ஆங்காங்கே மணல் திட்டுக்கள் உருவாகி உள்ளன. இதை கருத்தில் வைத்து, போதிய எண்ணிக்கையில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும். கருங்கல் குவாரிகளில் இருந்து, எம் சாண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் எடுப்பது முதல் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.
முறையான ரசீது இன்றி, எம் சாண்ட் விற்பனை செய்வதால், ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு அப்பட்டமாக நடக்கிறது. முறையான அனுமதி இன்றி கிரஷர்களில் இருந்து அனுப்பப்படும் எம் சாண்ட்டை பயன்படுத்துவதால், கட்டடங்கள் தரம் குறைந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
எனவே, உரிமம் இன்றி செயல்படும் எம் சாண்ட் ஆலைகளை தடுக்க வேண்டும். ஒருமுறை வழங்கப்படும் நடைச்சீட்டை தவறாக பயன்படுத்தி, கனிம வளங்கள் அதிக அளவில் எடுத்து செல்லப்படுகின்றன.
அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பெயர்களை பயன்படுத்தி, தினமும், 7,500 லோடு கனிம வளங்கள் எடுத்து செல்லப்படுகின்றன. இவை அனைத்தும் வெளி மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக எடுத்து செல்லப்படுகின்றன. இந்த விஷயத்தில், அரசு உரிய கவனம் செலுத்தி கடத்தலை தடுத்தால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும், மக்களுக்கும் தேவையான அளவுக்கு மணல் கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திர மணலுக்கு அனுமதி தேவை!
கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவிற்கும், கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கும் கனிமவளங்கள் அதிகம் கடத்தப்படுகின்றன. ஆந்திராவில் உள்ள குவாரிகளில் முறைப்படி எடுக்கப்படும் மணலை, தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளோம். இது அரசின் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.
- எஸ்.யுவராஜ்
தலைவர், தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு