ADDED : டிச 28, 2024 12:57 AM

சென்னை: தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் காந்தி கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள, 1,200 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளுக்கு, தலா ஒருவர் வீதம், 1,200 துாய்மை பணியாளர்களை, அரசு 2012ல் தேர்வு செய்தது. அப்போது, தொகுப்பூதியமாக, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. பலகட்ட போராட்டத்துக்கு பின், 2016ல், 3,000 ரூபாயாகவும், 2020ல், 6,000 ரூபாயாகவும், உயர்த்தப்பட்டது.
அதே சமயம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு, தற்போது, 15,500 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. அதை அடிப்படையாக வைத்து, முழுநேர பணியாளர்களாகிய எங்களுக்கும், 15,000 ரூபாய் அடிப்படை ஊதியம் வழங்குவதோடு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கை மனுவை, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர், செயலரிடம் பலமுறை கொடுத்தும் பயனில்லாததால் தான், தற்போது கோட்டையை முற்றுகையிடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், அவர்களிடம் மனுக்களை பெற்ற போலீசார், துணை முதல்வரின் உதவியாளரிடம் வழங்கினர்.