துாய்மை பணியாளர்களுக்கு ஓராண்டாக ஊதியம் இல்லை * அரசுக்கு அன்புமணி கண்டனம்
துாய்மை பணியாளர்களுக்கு ஓராண்டாக ஊதியம் இல்லை * அரசுக்கு அன்புமணி கண்டனம்
ADDED : டிச 11, 2024 07:18 PM
சென்னை:'அரசு பள்ளி துாய்மை பணியாளர்களுக்கு, தி.மு.க., அரசு ஓராண்டாக ஊதியம் வழங்கவில்லை' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக கிராமப்புறங்களில் உள்ள துவக்க பள்ளிகளில் துாய்மைப் பணியாளர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய், நடுநிலை பள்ளிகளில் 1,500 ரூபாய், உயர் நிலை பள்ளிகளில் 2,250 ரூபாய், மேல்நிலை பள்ளிகளில், 3,000 ரூபாய் என்ற அளவில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்த தொகையை கூட, ஓராண்டாக வழங்காமல், தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் சமூக நீதி அரசு என்று கூறிக் கொள்ளும் தி.மு.க., தலைமை, இது தான் சமூக நீதியின் அடையாளமா என்பதை விளக்க வேண்டும்.
ஒருபுறம், மாதம் 12,500 ரூபாய் மட்டுமே ஊதியமாக பெறும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி போராடுகின்றனர், இன்னொருபுறம், துாய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் மறுக்கப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்த தமிழகமும் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற மாயையை ஏற்படுத்த முனைகின்றனர்.
மக்களின் துயரம் கோபமாக மாறும்போது, அந்த கோப வெள்ளத்தில் அனைத்து அநீதிகளும் அடித்துச் செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.