அயோத்தியில் சங்கர மடம் சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர்
அயோத்தியில் சங்கர மடம் சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர்
ADDED : ஆக 27, 2025 02:30 AM

அயோத்தி : உ.பி., மாநிலம் அயோத்தியில் காஞ்சி சங்கர மடத்தின் கிளை மடம் அமைந்துள்ள சாலைக்கு, 'ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹராஜ் மார்க்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காஞ்சி சங்கர மடத்தின் கிளை மடம் உ.பி., மாநிலம் அயோத்தியின் பிரமோத்வன் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மடம் அமைந்துள்ள சாலைக்கு, காஞ்சி சங்கராச்சாரியார், மறைந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர் சூட்ட, மாநகர நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கான பெயர் சூட்டு விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா அயோத்தியில் நடந்தது. மாநகர மேயர் கிரீஷ் பதி திரிபாதி, கவுன்சிலர்கள், வேத விற்பன்னர்கள், வேதபாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மடத்தில் இருந்து அனைவரும் ஊர்வலமாக சென்று, 'ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹராஜ் மார்க்' என்ற பெயர் சூட்டிய சாலையின் பெயர்ப்பலகையை திறந்து வைத்தனர்.
ஸ்ரீ ஜெயேந்திரரின் ஆன்மிக, சமூகப்பணிகள் பற்றியும், அயோத்தி மற்றும் ராம ஜென்மபூமி கோவில் இயக்கத்துடன் அவருக்கு இருந்த நெருக்கமான தொடர்பு பற்றியும் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு ரங்கன் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.