ADDED : பிப் 28, 2024 08:47 AM

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் இருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான இலங்கை தமிழர் சாந்தன், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் இலங்கை தமிழர் சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022ம் ஆண்டு, ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த சாந்தன் உள்ளிட்ட அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் சாந்தன், இலங்கை தமிழர் என்பதால், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன்.
இந்நிலையில், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சாந்தன் சிகிச்சை பெற்று வந்தார்.
காலமானார்
கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோமா நிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.,28) அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தாக ராஜிவ் காந்தி மருத்துவமனை டீன் தோரணி ராஜன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
சாந்தன் காலமானதை தொடர்ந்து டீன் தோரணி ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சாந்தனுக்கு இன்று காலை 4 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து கண்காணிப்பில் வைத்திருந்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.50 மணிக்கு காலமானார்'' எனக் கூறினார்.

