'இவ்ளோதான் நீர் இருக்கு' என இனி 'தண்ணி' காட்ட முடியாது: நீர்நிலைகளை கண்காணிக்கிறது செயற்கைக்கோள்
'இவ்ளோதான் நீர் இருக்கு' என இனி 'தண்ணி' காட்ட முடியாது: நீர்நிலைகளை கண்காணிக்கிறது செயற்கைக்கோள்
UPDATED : ஜூலை 04, 2025 01:14 AM
ADDED : ஜூலை 03, 2025 10:13 PM

சென்னை:தமிழக நீர்வள தகவல் மேலாண்மைக்கும், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நீர்நிலைகளின் கண்காணிப்புக்கும், புதிய இணையதளங்கள் துவக்கப்பட்டுள்ளன.
'நபார்டு' ஆலோசனை சேவைகள் மற்றும், 'வசார் லேப்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, தமிழக நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்புக்கு, tnwrims.tn.gov.in என்ற இணையதளத்தை, நீர்வளத் துறையினர் உருவாக்கி உள்ளனர்.
இதற்காக, நீரை பயன்படுத்தும் துறைகள், பாசனதாரர்கள் உள்ளிட்டோரிடம், எதிர்கால தேவைகள் குறித்து கருத்துக்கள் பெறப்பட்டு உள்ளன.
அணைகள், கால்வாய்கள், சிறுபாசன ஏரிகளை கண்காணிக்கும் வகையில், இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய நீர்வள ஆணையம், இந்திய வானிலை மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் போன்றவற்றின் தகவல்களை ஒருங்கிணைத்து, இணையதளம் செயல்பட உள்ளது.
மாநிலத்தின் நீர் தேவை, கிராமங்களில் தண்ணீர் வரவு செலவு, குடிநீர் பற்றாக்குறை நிலவரம், அணைகளுக்கு நீர்வரத்து முன்னறிவிப்பு, நிலத்தடி நீர் தகவல், ஆறுகளுக்கு இடையே நீர் பரிமாற்றம் போன்ற தகவல்களும் இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
இந்த இணையதளத்திற்காக, 30 கோடி ரூபாய் அரசு செலவிட்டுள்ளது.
இதேபோல, செயற்கைக்கோள் அடிப்படையிலான நீர்நிலைகளின் தகவல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு, 3.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், tnwip.tn.gov.in என்ற இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நீர்நிலைகளின் கொள்ளளவு இழப்பையும் கண்டறிய முடியும். நீர்நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல்களையும் அனுப்ப முடியும்.
இந்த இரண்டு இணையதள சேவைகளையும், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.