ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொன்ற வழக்கு! வாலிபருக்கு தூக்கு தண்டனை
ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொன்ற வழக்கு! வாலிபருக்கு தூக்கு தண்டனை
ADDED : டிச 30, 2024 04:27 PM

சென்னை: சென்னையில் ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளிக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு சென்னை சிறப்பு மகளிர் கோர்ட் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
2022ம் ஆண்டு பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி மாணவி சத்யபிரியா என்பவரை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்யபிரியா கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது தந்தை தற்கொலை செய்துகொள்ள, நோய்வாய்ப்பட்டிருந்த தாயாரும் பின்னர் உயிரிழந்தார்.
போலீசார் விசாரணையில், தம்முடன் பழகியதை நிறுத்தியதால், மாணவி சத்யபிரியாவை அவர் கொன்றது தெரிய வந்தது. 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையில் சதீஷ் குற்றவாளி என்று அறிவித்த மகளிர் கோர்ட், இன்று (டிச.30) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.
அதன்படி, இன்று குற்றவாளி சதீஷ்க்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மாணவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 35,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாகவும் கோர்ட் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த அபராத தொகையில் 25,000 ரூபாய் பாதிக்கப்பட்டவரின் சகோதரிகளுக்கு அளிக்கவும் 15,000 ரூபாயை அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு இழப்பீடாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் கூறி உள்ளது. சிறை தண்டனை முடிந்த பின்னர், சதீஷை சாகும் வரை தூக்கிலிடவும் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.