ADDED : ஜூலை 15, 2025 02:07 AM

சென்னை : “இனி எக்காலத்திலும், எந்த தொண்டர் மீதும், பழி சுமத்தி, பழிக்கு ஆளாக வேண்டாம்,” என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
ம.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு, நான் காரணம் இல்லை. 'பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார்' என, வைகோ கூறியுள்ளார்.
நான் மாத்தையா போல் துரோகியா, எனக்கு நீதி வேண்டும். வைகோ, துரை ஆகியோரின் அரசியலுக்காக, 32 ஆண்டுகள் விசுவாசமாக குடும்பத்தை மறந்து உழைத்தேன்.
என் வாழ்க்கையின் 32 ஆண்டுகால வசந்தத்தை தொலைத்த என்னால், இன்னும் துாங்க முடியவில்லை. அறம் சார்ந்த என் அரசியல் பொது வாழ்வை, மகனுக்காக வீழ்த்த, 'துரோகம்' என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது? வேதனையில் துடிக்கிறேன்.
இனி எக்காலத்திலும், யார் மீதும், எந்த தொண்டர் மீதும், இதுபோன்ற அபாண்டமான பழியை சுமத்தி, பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்திருக்கும் உயரத்திற்கு அது அழகல்ல.
இனி, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பாதுகாக்கும் களத்தில், ஒரு படைவீரனாக நின்று போராடுவேன். துரை, என்னை பொதுவெளியில் விமர்சித்ததால், பதில் சொல்ல வேண்டிய ஜனநாயகக் கடமை எனக்கு உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.