ADDED : அக் 13, 2024 08:07 AM
சென்னை : தமிழகத்தில் ஆபரண தங்கம் சவரன் விலை, 57,000 ரூபாயை நெருங்குகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. கடந்த வாரத்தில், அதன் விலை சற்று குறைந்த நிலையில் இரு தினங்களாக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,095 ரூபாய்க்கும்; சவரன், 56,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 102 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 7,120 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 56,960 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
கடந்த இரு தினங்களில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 95 ரூபாயும்; சவரனுக்கு, 760 ரூபாயும் அதிகரித்து உள்ளது.
நேற்று வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 103 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
அமெரிக்காவின் மத்திய வங்கி, வரும் நவம்பரில் இருந்து வைப்பு நிதிக்கான வட்டியை, 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், வைப்பு நிதியில் முதலீடு செய்வதை தவிர்த்து, தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வருகிறது.
மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களாலும், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.