'அண்ணாமலை அண்ணா காப்பாற்றுங்கள்': ரத்த காயங்களுடன் கதறும் பா.ஜ., நிர்வாகி
'அண்ணாமலை அண்ணா காப்பாற்றுங்கள்': ரத்த காயங்களுடன் கதறும் பா.ஜ., நிர்வாகி
ADDED : ஜூலை 14, 2025 03:33 AM

துாத்துக்குடி: 'அண்ணாமலை அண்ணா என்னை காப்பாற்றுங்கள்' என ரத்த காயங்களுடன் வீடியோ வெளியிட்ட பா.ஜ., நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை, 38; கூட்டாம்புளி பகுதியில் பைக் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். பா.ஜ., கலை மற்றும் கலாசாரப் பிரிவில் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.
வீட்டை புதுப்பித்து கட்டி வருவது தொடர்பாக இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி பாலமுருகனுக்கும் தகராறு இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ராஜதுரை தன் வீட்டின் அருகே நின்றபோது, பாலமுருகன், அவரது தந்தை பால்ராஜ் உட்பட ஆறு பேர் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் திடீரென அவரை தாக்கியுள்ளனர்.
இதில், ராஜதுரை, அவரது மனைவி ஜெயந்தி, உறவினர்கள் கோகுல்ராஜா, ஜெயராஜ், நவீன் ஆகியோர் தாக்கப்பட்டனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
ரத்தக் காயங்களுடன் பா.ஜ., நிர்வாகி ராஜதுரை வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர், 'தி.மு.க.,வினர் என்னை வெட்டிவிட்டனர்; அண்ணாமலை அண்ணா என் உயிரை காப்பாற்றுங்கள். போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.